சில்லரை வணிகத்தை பாதுகாத்திடதிருச்சியில் அடையாள முற்றுகைப் போராட்டம்!

August 30, 2025

அண்மைக்காலமாக தமிழகம் மட்டுமல்லாது அகில இந்திய அளவில் பெருகிவரும் கார்ப்பரேட் கம்பெனிகளின் சில்லரை வணிக கபளீகரம், சில்லரை வணிகத்தில் சூப்பர் மார்க்கெட், மளிகை வணிகம் மட்டுமல்லாது சிறு,குறு,நடுத்தர வணிகர்களையும் மிகப்பெரும் அளவில் பாதிப்புக்கு உள்ளாக்கி, வாழ்வாதார இழப்பையும், வருவாய் இழப்பையும் ஏற்படுத்தி, அரசுக்கும் வரிவருவாய் இழப்பை ஏற்படுத்தி சில்லரை வணிகர்களை அடியோடு அழிக்கும் நிலை உருவாகிக்கொண்டிருக்கின்றது.
கார்ப்பரேட் கம்பெனிகளின் சில்லரை வணிகத்திற்கு எதிரான தீவிரவாதம் என்றே இதனை குறிப்பிட வேண்டும். மத்திய&மாநில அரசுகள் உடனடியாக விழித்தெழுந்து பாரம்பரிய இந்திய சங்கிலி தொடர் வணிகத்தை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லையெனில், ஒட்டுமொத்த அடித்தட்டு வணிகர்களின் வாழ்வாதாரம் வீழ்ச்சி அடைவதோடு, பொருளாதார சரிவுக்கும் வழிவகுத்துவிடும் என்பதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தொலை நோக்கு பார்வையோடு கணித்து, கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் உள்ளுர் சில்லரை வணிகங்களில் ஈடுபடுவதை தவிர்த்திடும் நோக்கோடும், கார்ப்பரேட் நிறுவனமான டி&மார்ட் நிறுவனம் திருச்சி, வயலூர் ரோடு, வாஸன்வேலி பகுதியில் தற்போது 1 லட்சம் சதுரஅடிக்கு மேல் அமைத்து வரும் புதிய கிளை முன்பாக வருகின்ற 30&8&2025 சனிக்கிழமை காலை 10.35 மணியளவில் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் மாபெரும் முற்றுகைப்போராட்டம் நடைபெற உள்ளது.
இம்முற்றுகைப்போராட்டம் சில்லரை வணிகர்களின் வாழ்வாதாரப் போராட்டமாகவும், சில்லரை வணிகத்தை பாதுகாக்கும் போராட்டமாகவும் நடைபெற இருப்பதனால், தமிழக அனைத்துதரப்பு வணிகர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு, காவிரி வெள்ளமென காவேரிக்கரையாம் திருச்சியில் ஒன்றுகூடி, முற்றுகைப்போராட்டத்தை முன்னெடுத்து வழிநடத்திட வணிகர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். அலைகடலென மலைக்கோட்டை மாநகரை முற்றுகையிட! அனைவரும் ஆர்ப்பரித்து வாரீர், ஒன்றிணைவோம்! ஆதரவு தாரீர்!!