ஆட்சிமன்றக்குழுக் கூட்டம் 7-10-2025 கோயம்புத்தூர், பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆட்சிமன்றக்குழுக் கூட்டம் 7-10-2025 அன்று காலை 11 மணியளவில் கோயம்புத்தூரில் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது. கோவை மண்டலத்தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். மாநிலப்பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு, மாநிலப் பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா, தலைமைச் செயலாளர் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார் மண்டலத்தலைவர்கள், மாநில நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்று கூட்டத்தினை சிறப்பித்தனர். ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் கீழ்கண்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, செயற்குழு ஒப்புதலுக்கு எடுத்துசெல்ல தீர்மானிக்கப்பட்டது.

1) கோவை மாநகர், அவினாசி சாலையில் கடந்த ஆட்சி காலத்தில் துவக்கிவைக்கப்பட்டு, தற்போதுள்ள ஆட்சியாளர்களால் நிறைவு பெற்றிருக்கின்ற கோவை-அவினாசி மேம்பால பணிகள் நிறைவுபெற்று நாளை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்துவைக்கப்பட இருப்பதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோவை மாவட்டம் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அவமதித்திருப்பதற்கு பேரமைப்பு தனது கண்டனத்தை பதிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3) தமிழக பட்டாசு வணிகத்தை செம்மைப்படுத்திட, தற்காலிக உரிமங்களை விரைந்து அளித்திட கோரிக்கை விடுக்கப்பட்டது.
4) அரசு ஊழியர்களுக்கும் மேலாக உழைத்து, வரி செலுத்தும் வணிகர்களுக்கு, வணிகர்கள் செலுத்தும் வரிக்குஏற்ப ஆண்டுதோறும் ஊக்கத்தொகை அளித்திட கோரிக்கை விடுக்கப்பட்டது.

5) மத்திய அரசின் வரிச்சீராய்வுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நன்றியும், பாராட்டும், வரிச்சீராய்வுக்கும், வரி குறைப்புக்கும் ஒப்புதல் அளித்த மாநில அரசுக்கும் நன்றி தெரிவிப்பதென தீர்மானிக்கப்பட்டு கோயம்புத்தூரில் வருகின்ற 11-11-2025 செவ்வாய் கிழமை அன்று பாராட்டுவிழா நடத்திட முடிவெடுக்கப்பட்டது.
6) மேலும், கோவையில் நடைபெறும் பாராட்டு விழாவிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் குறைந்தது 100 பேர் பங்கேற்றிட தீர்மானிக்கப்பட்டது.
7) 2026-ஆம் ஆண்டுக்கான மே&5 வணிகர்தின மாநிலமாநாடு குறித்தும், திருவாரூரில் நடத்திடுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
8) டிசம்பர் மாதம் நடைபெற இருக்கும் பேரமைப்பின் பொதுக்குழு கூட்டத்தை திண்டுக்கல் மண்டலம், மற்றும் மண்டலம் சார்ந்த மாவட்டங்களின் ஒத்துழைப்புடன் தேனி மாவட்டத்தில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
9) தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நிலுவையில் உள்ள வணிகர்களின் அத்தியாவசிய கோரிக்கைகளுக்கு துரிதமாக தீர்வுகாண வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்ட நிறைவாக கோவை மாவட்டத் தலைவர் ஜி.இருதயராஜா அவர்கள் நன்றி தெரிவிக்க கூட்டம் இனிதே நிறைவுற்றது.